எளிதாக அறிவோம் ஆங்கிலம். - வை.மகேந்திரன்
எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்)
பகுதி 1 to 19
Author:
MAHENDIRAN V
Formerly Professor of English
FOUNDER: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 9842490745, 6380406625 Email: poigaimahi@gmail.com
[Copyright owned by Mahendiran V.
முன்னுரை
ஆங்கில மொழி சம்பந்தமாக
என்னிடம் பலர் பல இடங்களில் கேட்ட சந்தேகங்களுக்கு, ஒரு கட்டுரை போல் அமைத்து பகுதிவாரியாக சில விளக்கங்களை தந்துள்ளேன்... நியாயமான சந்தேகங்கள் அவைகள். அவை என்னவென்றுதான் பாருங்களேன்..!
MAHENDIRAN V - AUTHOR
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 1
ஆங்கிலம் பேச அடிப்படை தகுதி என்ன? என்னிடம் ஒருவர் கேட்டார்.
முகநூலில் எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இங்கும் அதை எழுதியுள்ளேன்.
அப்படி ஒரு கேள்வியை நீங்களும் வைத்திருந்தால் இதை படிக்கவும்.
யாதொரு தகுதியும் தேவையில்லை. ஆனால் முதலில் உங்கள் மொழியிலேயே ஒரு கருத்தை நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்தவரை பொருட்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பத்து பேர் முன்னிலையில் நீங்கள் எழுந்து நின்று ஒரு அரை மணி நேரம் ஒரு தலைப்பை பற்றி உங்கள் தாய் மொழியிலேயே பேசக் கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.
சிலருக்கு அல்ல, பலருக்கும் ஒரு வித நாணம் அல்லது கூச்சம் ஏற்படும். அதனால் உங்களுக்கு உங்கள் மொழி தெரியவில்லை என்றா அர்த்தம்?
அழகாய் தெரியும்... ஆனால் அந்த இடத்தில் ஒரு பதற்றம் அவ்வளவே!
தாய் மொழியிலேயே இப்படி சற்றொரு தடை ஏற்படும்போது ஆங்கிலம் பேசும் பொழுது ஏற்படாதா என்ன?
ஆக, சற்றும் அச்சம் இருக்கக் கூடாது - என்பதே முதல் தகுதி!
உங்களிடம் ஆங்கிலத்தில் ஒருவர் பேசும்பொழுது உங்கள் கருத்தை சற்றும் பயப்படாமல் ஆங்கிலத்திலேயே (தவறாக இருந்தாலும் பரவாயில்லை, என்ன வந்து விடப்போகிறது... என்ற தைரியத்துடன்) பேச வேண்டும்.
ஆங்கிலம் உங்கள் தாய் மொழி இல்லை, ஆதலால் தவறாகிவிடுமோ என்ற அச்சம் தேவையற்றது.
தவறேதுமின்றி சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள் ஒரே நாளில் அப்படி உருவாகிவிடவில்லை. நீங்கள் செய்யும் தவறுகளை விட பெருந்தவறுகளை செய்திருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வாகனம் ஓட்ட ஒரே நாளில் நாம் கற்று கொள்ளவில்லை. பல நாளைய பயிற்சி அது.
அது போல தான் ஆங்கிலத்தில் பேசும் திறமையும்.
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்" - கேள்வி பட்டதில்லை நீங்கள்?
"Practice makes one be perfect" என்பதின் தமிழாக்கம் தான் அது!
வார்த்தைகள் பற்றாக்குறை இலக்கண அறிவின்மை - என்பதல்லாம் சரியான காரணமில்லை.
தாய் மொழியான தமிழில் உள்ள மொத்த வார்த்தைகளில் ஒரு பத்து சதவிகித வார்த்தைகளை தான் தமிழில் பேசும் பொழுது நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட வார்த்தைகளே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
அதே கதை தான் ஆங்கிலத்திலும்.ஒரு 250, 300 வார்த்தைகளை தான் பயன்படுத்தப் போகிறீர்கள் ஆனால் ஒரு ஆங்கில அகராதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கலாம். அனைத்தும் உங்களுக்கு தேவையன்று. அனைத்து வார்த்தைகளையும் அறிந்தோர் யாருமில்லை!
இலக்கணம் தெரிந்தால் தான் ஆங்கிலம் பேச முடியும் என்று இல்லை. இலக்கணத்தை படிக்காமலேயே அது உங்களுக்கு தெரிந்துவிடும், ஆமாம்... அதாவது நீங்கள் ஆங்கிலம் என்ற சூழ்நிலையில் பழகிக் கொண்டே இருந்தால்!
ஆங்கில நாளிதழ்களை வாசித்தல், ஆங்கிலம் நன்கு பேசுபவர்களை கவனித்துக் கொண்டிருத்தல், அவர்களுடன் ஆங்கிலத்தில் (பயிற்சிக்காகவாவது) உரையாற்றிக் கொண்டிருத்தல், தமிழ் திரைப்படங்களை ஆங்கில சப் டைட்டிலுடன் காணுதல் போன்றவையையே ஆங்கிலச் சூழ்நிலை என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
இம்மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலமே நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்ற முடியும்.
உங்களுக்கு ஆங்கிலத்தில் ஓரளவு பேச எழுத தெரிந்திருந்தால் தான் இலக்கணத்தை முழுமையாக தெரிந்து கொள்ள ஆர்வம் வரும்.
-----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 2
முதலில், நம் தாய்மொழியை நாம் சரியாக பேசகிறோமா என்பதை பார்ப்போம்...
பல நாடுகளில் தமிழ் முக்கியமான மொழியாக பேசப்படுகிறது.
நம்மை விட அழகாக தமிழ் பேசுபவர்கள் இலங்கை தமிழர்கள்.
எழுத்தளவில், பெரிய மாற்றங்கள் ஏதும் பெரிதாக இல்லை, ஆனால் சொல்வடிவம், சொல்வளம் உச்சரிப்புகள் இனிமையாக இருக்கும். (வெளிநாடுகளில் நான் கண்ட அனுபவம் இது)
மொரிஷியஸ் தமிழர்கள் நம்மைக்காட்டிலும் பிரமாதமாக பேசுகிறார்கள்.
நாம் ஆங்கில வார்த்தைகளை தமிழினூடே பயன்படுத்துவதைபோல் அவர்கள் FRENCH வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், எப்படி சிங்கையில் 'லா... லா' போட்டு பேசுகிறார்களோ அதைப்போல.
இலங்கை தமிழர்களின் தமிழில் ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது அவ்வப்பொழுது சிங்கள வார்த்தைகள் தென்படும்.
மலேஸிய தமிழ், இலங்கை மற்றும் சென்னை சாயலில் இருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் (பெரிய பதவிகளில் வகிப்போர்கூட), ஒருவரையொருவோர் சந்திக்கும்பொழுது தமிழில் மட்டுமே உரையாடுகிறார்கள் (அப்பாடா பாலைவனத்தில் ஒரு நீரூற்று என்பதை போல்).
தென் அமெரிக்க கண்டத்தில் ஆங்கில மொழிக்கு வேலை இல்லை, ஆனால் பாருங்கள், CHILE நாட்டின் சில பகுதிகளில் வாழும் மக்கள் பேசும் ஒரு மொழியில் நிறைய தமிழ் சொற்கள் காணப்படுவதாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.
ஆக, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதெல்லாம் உண்மைதான், தமிழர்களாகிய நாம் தான், தமிழை கீறலாக்குகிறோம்.
ஹிந்தி இங்கு வந்து தமிழை அழித்துவிடாது, நாம் தமிழை அழிக்காமல் இருந்தால் போதும்.
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 3
மொழி:நடை என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார்.
இதை ஆங்கிலத்தில் Dialect என்று கூறுவர்
"எத்தனையாவது" என்கிற வார்த்தைக்கு சரியான ஆங்கில வார்த்தை என்ன, Google செய்தும் பார்த்து விட்டேன் சரியாக புரியவில்லை-என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
எனது பதில்.....
ஒரு மொழியின் நடை மற்றொரு மொழியின் நடையை ஒத்திருக்க வேண்டும் என்று இல்லை.
Have you been kodaikkanal? இது ஆங்கிலம். இதன் நேரடி தமிழாக்கம், நீங்கள் கொடைக்கானலில் இருந்திருக்கிறீர்களா? ஆனால் அர்த்தம் சென்றிருக்கிறீர்களா? என்பது தான். Have you gone to kodaikkanal? என்று பேசுவதில்லை.
I was born -க்கும் "நான் பிறந்தேன்" என்பதற்கும் நடையில் (dialect) சம்பந்தமில்லை, ஆனால், அர்த்தம் 'நான் பிறந்தேன்' என்பது தான். நடைப்படி பார்த்தால் "கொண்டு வரப்பட்டேன்" என்பதாகும்.!
I'm interested- நடை "கவரப்படுகிறேன்".
அர்த்தம், .'விருப்பாக உள்ளது'.
I'm surprised - நடை, 'நான் ஆச்சரியமூட்டப்படுகிறேன்'.
அர்த்தம், 'ஆச்சரியப்படுகிறேன்'.
"Let a language be in its own dialect during translation" என்று அக்காலத்திலேயே மொழியியல் வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.
சரி.... நாம் மேட்டருக்கு வருவோம்!
நீங்கள் எத்தனையாவது இட்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?
What number iddly are you having now?
Which number iddly are you having now?
Which ordinal iddly are you having now?
நீங்கள் உங்கள் குடும்பத்தில் எத்தனையாவது குழந்தை / பிள்ளை / மகன்?
What number child/issue/son are you in your family?
Which number child/issue/son are you in your family?
Which ordinal child/issue/son are you in your family?
இது உங்களுக்கு எத்தனையாவது பயணம்?
What number journey is this to you?
Which number journey is this to you?
Which ordinal journey is this to you?
'How many' என்பதற்கு "எத்தனை" என்று அர்த்தம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் "எத்தனையாவது" என்பதற்கு ஒரே வார்த்தையில் ஆங்கிலத்தில் வார்த்தை இல்லை. WHAT NUMBER, WHICH NUMBER, WHICH ORDINAL போன்றவை தான் இணைச் சொற்கள்.
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 4
House, Home... என்ன வித்தியாசம்?
அனைவருக்கும் அறிந்த செய்திதான் இது. பலரும் அறியட்டுமே என்பதற்காக இதைச் சொல்கிறேன்..
Home, House - இரண்டுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?
Metaphorical structure -ல் ஒரு சுவையான வித்தியாசம் உண்டு.
"While house is constructed by brick and cement, home is done by love and affection"
(House செங்கற் கல்லாலும் சிமென்ட் ஆலும் கட்டப்படுகிறது.
Home அன்பாலும் பாசத்தாலும் கட்டப்படுகிறது.)
மற்றபடி இரண்டிற்கும் வீடு அல்லது இல்லம் என்பது தான் தமிழ்.
"Don't make my home a house" என்று ஒரு Proverb உண்டு.
அர்த்தத்தை பாருங்கள் வினோதமாக இருக்கும்.
வீட்டில் ஏதும் குழப்பத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதே அது!
ஆக.., House என்றால் அது ஒரு வசிக்கத் தகுந்த கட்டிடம்.
Home என்பது சந்தோஷத்துடன் வாழும் ஒரு இல்லம் - என்பதே இதன் உள்ளர்த்தம்!
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 5
கட்டளை (Imperative) வாக்கியத்திற்கும், should, must, ought to பயன்படுத்தி எழுதும்/ பேசும் வாக்கியத்திற்கும் அப்படி என்ன வித்தியாசம்..-என்று ஒருவர் கேட்டார். நல்ல கேள்வி இது.
Come here.
You should come here.
You must come here.
You ought to come here.
You have to come here.
You should have come here.
அப்படி என்ன வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? சின்னஞ்சிறு வித்தியாசம் தானே? என நினைக்கலாம். உண்மை தான். ஆனால் இவற்றிற்கான தமிழ் அர்த்தத்தத்தை பார்க்கும்பொழுது தான் வித்தியாசம் நமக்கு புலப்படும். எந்த சூழ்நிலையில் எதை பயன்படுத்த வேண்டும் என்பதும் தெரியவரும்.
அவ்வாக்கியங்களுக்கான தமிழை முறையே காண்போம்.
இங்கு வா.
நீ இங்கு வரவேண்டும்.
நீ இங்கு வந்தாக வேண்டும்.
நீ இங்கு வந்தே ஆகவேண்டும்.
நீ இங்கு வரவேண்டியுள்ளது.
நீ இங்கு வந்திருந்திருக்க வேண்டும்.
ஆக.. ஒன்று புலப்படுகிறது.. உலகம் முழுவதும் கருத்து ஒன்றாகத்தான் இருக்கிறது. அதுவும் தமிழ் மொழியில் எந்த மொழியையும் மொழியாக்கம் செய்யலாம் என்பதும் தெரியவருகிறது அல்லவா?
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 6
எது முக்கியம்?
என்ன பேசுகிறோம் என்பதா? எப்படி அதை பேசுகிறோம் என்பதா?
ஆங்கிலத்தில் பேசும் பொழுது, பேசப் போகும் சங்கதியின் மீது மட்டுமே கவனம் வைக்கவேண்டும்.
அதாவது என்ன பேசப் போகிறோம் என்பதில் தான் எண்ண ஓட்டம் இருக்க வேண்டும். அதை எப்படிப் பேசுவது என்பதில் நேரம் செலவழித்துக்கொண்டிருக்கக் கூடாது.
ஏன் இன்னும் சொல்லப்போனால், இலக்கண பிழை வருமோ.. என்ற எண்ணம் அறவே வரக்கூடாது.
கருத்தை தெரிவித்து விடவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்க வேண்டும். பிழை சற்று வரட்டுமே அதனால் என்ன? போக போக சரி செய்து கொள்ளலாம்" என்றொரு துணிச்சல் மனதில் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, 'எங்கே போகிறீர்கள்?" என்று ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேட்கும் பட்சத்தில்,
குறைந்த பட்சம் "Where you go?" என்றாவது கருத்தை உதிர்த்து விட வேண்டும்.
அதை Where are you going?- என்று பேசுவதா, Where do you go?- என்று பேசுவதா... என்று யோசித்து பிறகு தீர்மானம் செய்வதனாலேயே சரளம் பறிபோய்விடுகிறது.
வட இந்தியர்கள் தமிழ் பேசும் போது பார்த்திருக்கலாம்,
"நீங்கே எங்கே போறான். அங்கே நானும் வர்றான்" - இதை செல்லமாக சேட்டுத் தமிழ் என்பர். "நீங்க போகிற இடத்திற்கு தான் நானும் வருகிறேன்" - என்பது சரியான தமிழாக இருக்கலாம், இருந்தாலும் அந்த சேட்டுத் தமிழை சற்று அனுசரித்து ரசித்து புரிந்து கொள்கிறோமல்லவா?
அது போல உங்கள் ஆங்கிலம் ஆரம்பத்தில் தவறாக இருந்தாலும், பேசப்பேச, செய்தித்தாள்களை படிக்கப்படிக்க, நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களுடன் உரையாற்ற உரையாற்ற ஆங்கிலம் தானாக வந்து விடும். துணிந்து பேசுங்கள்! பயம், பதற்றம், ஏற்படுவது மற்றோரை பொருட்படுத்துவதால் தான்!
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 7
ஆங்கிலத்தில் Voice,Tense மற்றும் Statement என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
இதற்கு விளக்கம் பெறுவதை விட இன்ன வாக்கியம் எந்த Voice, Tense, மற்றும் Statement-ல் உள்ளது என்பதை அறிய முற்பட்டால், ஓ... இது தானா அது.. என்று அறிய முடியும்.
உதாரணத்திற்கு தமிழில் சில வாக்கியங்களை பார்ப்போம் ... ஆமாம் Random ஆக.
01. நீ எங்கே இருக்கிறாய்?
Where are you?
ACTIVE.
PURE PRESENT.
INTERROGATIVE AGAINST ADVERB OF PLACE.
02. இது உன்னால் செய்யப்பட்டதா?
Was it done by you?
PASSIVE.
SIMPLE PAST.
INTERROGATIVE/ SPECIFIC QUESTION.
03. இவர் இங்கே பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
He has been working here for years.
ACTIVE.
PRESENT PERFECT CONTINUOUS.
AFFIRMATIVE.
04. இதற்கு முன்பு இவர் எங்கு பணிபுரிந்து வந்தார்?
Where had he been working previously?
ACTIVE.
PAST PERFECT CONTINUOUS.
INTERROGATIVE AGAINST ADVERB OF PLACE.
05. இவரது சகோதரர் எங்கு பணிபுரிகிறார்?
Where does his brother work?
ACTIVE.
SIMPLE PRESENT.
INTERROGATIVE AGAINST ADVERB OF PLACE.
06. புதிய ஆட்சியர் நாகைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
A new collector has been placed for Nagai.
PASSIVE.
PRESENT PERFECT.
AFFIRMATIVE.
07. நாளை விடுமுறை தினம் ஆகும். Tomorrow will be a holiday.
ACTIVE.
FUTURE.
AFFIRMATIVE.
08. நாளை மறுநாள் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
Salary shall be disbursed you the day after tomorrow.
PASSIVE.
FUTURE.
AFFIRMATIVE.
09. யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
For whom are you waiting?
ACTIVE.
PRESENT CONTINUOUS.
INTERROGATIVE AGAINST ADJUNCT.
10. உங்கள் பெயர் கிஷோரா ?
Is your name Kishore?
ACTIVE.
PURE PRESENT.
INTERROGATIVE/SPECIFIC QUESTION.
11. கடிதத்தை தபாலில் அனுப்பி/யுள்ளேன்/யிருக்கிறேன்.
I've despatched the letter through post.
ACTIVE.
PRESENT PERFECT.
AFFIRMATIVE.
12. கடிதம் தபாலில் அனுப்பபட்டுள்ளது.
The letter has been despatched through post.
PASSIVE.
PRESENT PERFECT.
AFFIRMATIVE.
13. நிச்சயம் நான் நாளை அங்கு வந்து விடுவேன்.
I'll have reached there tomorrow surely.
ACTIVE.
FUTURE PERFECT.
AFFIRMATIVE.
14. என்ன ஒரு அற்புதமான விளையாட்டு இது!
What a fantastic game it is!.
ACTIVE.
PURE PRESENT.
EXCLAMATORY.
15. அந்த ஃபைல்களை உடனே இங்கு கொண்டு வாருங்கள்.
Bring those files here immediately.
ACTIVE.
SIMPLE PRESENT.
IMPERATIVE.
மேலே காணும் இந்த பயிற்சியை மையமாக வைத்து பல வாக்கியங்களை நீங்களே அமைத்து மேற்படி Voice Tense Statement விபரங்களை அறிய முற்பட்டால் இலக்கண பிழைகளை தவிர்க்கலாம்.
--------------------------------------------------------------- அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 8
ஆங்கிலம் பேசும் பொழுது சிலருக்கு ஒரு வித கூச்சம் ஏறபட முக்கியமான காரணம் என்ன?. "ஏன் உங்களுக்கு தமிழ் தெரியாதா? ஏன் Risk எடுக்கிறீர்கள்?- என்று பலர் கேட்டு விடுகிறார்கள். இது ஒருவித வெட்க்கத்தை தருவதாக பேசுபவர்கள் எண்ணுகிறார்கள். இன்னும் சொன்னால் இந்த காரணத்தினால் பலரும் ஆங்கிலம் பேச தயங்குவதற்கு காரணம்.
எந்த மலையாளியும் இன்னொரு மலையாளியுடன் பேசும் பொழுது ஆங்கிலத்தில் பேசுவதில்லை! தமிழர்களுக்குள் ஏன் இந்த நாடகத்தனம்?" - எனறு வியாக்கியானம் பேசுபவர்களே ஆங்கிலம் பேச கற்பவர்களின் எதிரிகள்.
ஏதோ நாம் வலுக்கட்டாயமாக ஆங்கிலம் பேசுகிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ் மாணவர்களிடம் தமிழில் பேசினால் தான் புரியும் என்பது நமக்கு தெரியாதா என்ன?
பயிற்சிக்காக நாம் அப்படி செய்கிறோம் என்பதை அவர்கள் அறியாததை பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை!
இதை நான் இங்கு குறிப்பிடக் காரணம், ஆரம்ப காலத்தில், என்னை இதே போல் Criticise செய்திருக்கிறார்கள். நான் செய்த முதல் காரியம் அவர்களை பொருட்படுத்தாததே!
நான் என் வழியை மாற்றிக் கொள்ளவில்லை.
ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமே கொண்டு சென்றேன். ஆங்கில சூழ்நிலையை குறைந்தது ஒரு மணி நேரமாவது மாணவர்கள் சுவாசிக்கட்டுமே என்பதற்காக. தமிழ் கூடாது என்பதற்கல்ல. விளைவு? மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்கள். கல்வி நிறுவனங்களுக்கு தான் பொறுமை இல்லை. அவர்களது protocol எனக்கு வித்தியாசமாக தெரிந்தது.
தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலம் பேசும் பொழுது கற்பிக்கும பொழுது இந்த சமூக பிரச்சனை வராது! ஆங்கிலத்தில் பேசித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுவதால் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை. கற்பிப்பதும் எளிது. இதை நீங்கள் அனுபவத்தில் உணரக்கூடும்.
இதை கருத்தில் கொண்டு தான், சில கல்வி நிறுவனங்கள் தாய் மொழித்தெரியாத பயிற்றுனர்களை ஆங்கிலம் கற்பிக்க பணியில் அமர்த்துகிறது!
இது ஒரு விதத்தில் சரி போல் தோன்றினாலும் உளவியல் ரீதியாக பார்க்கும் பொழுது மாணவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதை போல உணர்வார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்!
தமிழ் மாணவர்கள் நன்றாக தமிழும் ஆங்கிலமும் அறிந்த, உளவியல் அறிந்த பயிற்றுனர்களிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்வதே சிறந்தது!
என்ன ஒன்று ...., தேவைப்பட்டாலொழிய தமிழை எங்கும் பயன்படுத்தாது வகுப்பை ஆங்கிலத்திலேயே கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் பயில்பவர்களுக்கு ஒரு உயிரோட்டம் கிடைக்கும். துணைக்கு ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படும்.
எது எப்படியோ, இவ்விஷயம் பயிற்றுனரின் திறமை மற்றும் தரத்தை
பொறுத்தது.
-----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 9
ஆங்கில வழி கல்வி கற்போர் தான் ஆங்கிலம் நன்றாக பேசுவார்கள் என்ற கூற்று உண்மையா?
அப்படியெல்லாம் இல்லை. தாய் மொழி வாயிலாக (Tamil medium) ஆரம்பக் கல்வி பயின்றோர் நிறைய பேர் ஆங்கிலத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கிறார்கள்.
English medium, வாயிலாக பயில்பவர்கள் அனைத்து பாடங்களையும் ஆங்கில சூழ்நிலையிலேயே கற்பதால் ஆங்கில வார்த்தைகள் நிறைய தெரிந்திருக்க வாய்புண்டு. மற்றபடி ஆங்கிலம் பேசுவதில் தமிழ் வழியில் பயில்பவர்களை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் என்று இல்லை! மாணவனின் தனிப்பட்ட திறன் ஆற்றலை பொறுத்த விஷயம் இது. இயற்கையிலேயே சிலருக்கு மொழிப்புலமை இருக்கும். அவர்களுக்கு மீடியம் ஒரு பொருட்டே அல்ல. Self learning என்ற திறமையை பெறுவதற்கு யாருக்கும் தடையில்லை. .
அப்துல் கலாம் சொன்னது நினைவுக்கு வருகிறது. "நான் தாய் மொழி வாயிலாக கல்வி பயின்றதால்தான் விஞ்ஞான நுணுக்கங்களை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. நான் பழகிய சூழ்நிலையே எனக்கு ஆங்கிலம் கற்பித்தது"
ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் கல்வி பரிந்துரை திட்டத்தில் ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதே சிறந்தது என்று ஏறக்குறைய நிபந்தனையே வைத்திருந்தார்கள். (ஆங்கிலேயர்களின் நல்லெண்ணங்களில் இதுவும் ஒன்று)
ஆனாலும், ஆங்கிலத்தின் மகத்துவம் மற்றும் அந்தியாவசியத்தால்
உயர் மற்றும் மேல்நிலை கல்வியை ஆங்கில வழியில் படிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அது நல்லதாகவும் போய் விட்டது.. இந்தியர்கள் உலகளவில் ஆங்கில மொழியில் ஆங்கிலேயர்களுக்கு இணையாக கருதப்பட்டனர். நிறைய இந்தியர்கள் Barrister (இங்கிலாந்து சட்ட வழக்கில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கான பயிற்சித் தகுதி பெற்ற வழக்கறிஞர்; மாவழக்கறிஞர்) பட்டம் பெறுவதற்கு வசதி வாயப்புகளை British அரசாங்கம் ஏற்படுத்தி தந்தது. காந்தி நேரு பட்டேல் பாரதியார் அண்ணாதுரை எம்.எஸ் சுவாமிநாதன் இன்னும் எண்ணிலடங்காதோர் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர்கள். இவர்கள் தங்கள்ஆரம்ப கல்வியை தாய் மொழியில் பயின்றவர்கள்! தமிழகத்தை (கும்பகோணம்) சார்ந்த ஆங்கில இலக்கிய எழுத்தாளர் பார்த்தசாரதி அவர்களின் கட்டுரைகள் இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ஆங்கில பாடத்தில் வருகிறது. மிகச் சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் என்ற விருது ஆங்கிலேயர்களால் இவருக்கு வழங்கப்பட்டது.
Medium is not a matter to be well in English.
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 10
கலப்பு வாக்கியங்களை பேசும் பொழுதுதான் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது. தனி வாக்கியங்களை போட்டடித்து பேசி விடுகிறோம். ஏன் அப்படி?" என்றார் என்னிடம் ஒருவர்.
உண்மை தான்.
அவர் யார்? - என்பதை Who is he? என்று பேசுவதில் இக்கட்டு ஏதும் இல்லை. ஆனால்,
நீல நிற சட்டை அணிந்திருப்பவர் யார்?
என்பதை Who is the guy who is in blue shirt? என சட்டென்று பேச சிரமம் ஏற்படலாம்.
தமிழில் பேசும் பொழுது, இரண்டு வாக்கியங்கள் இணைந்திருக்கின்றன என்பதே நமக்கு தெரியாமலேயே தாய்மொழியில் பேசி விடுகிறோம்.
ஆனால் ஆங்கிலத்தில், "இது Complex Sentence, ஒரு Main clause மற்றும் ஒரு Subordinate clause - இனைந்திருக்கிறது அதற்கென்று ஒரு Rule உண்டு" - என்றெல்லாம் கூறி பயிற்ச்சிகளெல்லாம் கொடுத்து கற்போருக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
தனிவாக்கியம் கலப்பு வாக்கியம் என்றெல்லாம் இலக்கணம் பயின்று நாம் தமிழ் பேசக் கற்றுக் கொள்ளவில்லை.
அதை போலவே ஆங்கிலத்திலும் நடைமுறை வழக்கில் பேச பழக வேண்டும்.
பிறகு வேண்டுமானால் Clause வகைகளை பிரித்து பார்க்கலாம். அப்பொழுதுதான் இலக்கணம் மீது ஒரு ஆர்வம் வரும்.
நாம் அன்றாடம் பேசும் சில கலப்பு வாக்கியங்களை காண்போம்.
நான் எதிர்பார்க்கும் பொருள் இதுவல்ல.
This is not the thing what I look for.
நீ சொல்வது எனக்கு புரியவில்லை.
I couldn't get what you say.
நீ அணிந்திருக்கும் சட்டையை எங்கு வாங்கினாய்?
Where did you purchase the shirt which you have worn?
கொரோனா இன்னும் இருக்கிறது என்ற பொழுதிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
Although people know that Corona is existing, they turned to their routine work.
சரியான ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
Since there is no proper supports (grounds) for the case, it is dismissed.
வீட்டில் ஒரு function ஆதலால் நேற்று நான் பணிக்கு வர முடியவில்லை.
Because there was a function at our home, I couldn't come to duty yesterday.
உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
If you know the answer, proceed it.
சீனா தான் வைரஸை பரப்பியதாக அமெரிக்கா சீனாவை குற்றம் சாட்டுகிறது.
The U.S accuses China that it alone spread the virus.
நான் இங்கே இருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?
Who did tell you that I am here?
சரியான நபரை ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியது என் நினைவுககு வருகிறது!
I remember what Thiruvalluvar had quoted that a right person should be placed at a right job.
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 11
ஆங்கிலம் சரளமாக பேச உச்சரிப்பு முக்கியமா?
எதிரவர் புரியும் வகையில் ஒரு வரைமுறையுடன் எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்.
இருந்தாலும்,
ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் உச்சரித்தால் பேசும் பொழுது எளிமையாக இருக்கும்.
"வேர் ஆர் யு கோயிங்க்?" என்று உச்சரிப்பதைக் காட்டிலும்
"வே ஆ யு கோயிங்?' [Where are you going?] என்று பேசிப் பாருங்கள். ஏதோ ஒரு நெகிழ்ச்சியை உணர்வீர்கள்.
ஈஸ் யுவ நெய்ம் ஷங்கர் ?
உச்சரித்து பாருங்கள். [Is your name Shankar?] திணரல் வராது.
நேம் - என்று உச்சரித்தல் கூடாது. நெய்ம் என்பதுதான் சரியான ஆங்கில உச்சரிப்பு. வரவில்லை என்றால் மள்ளுக்கட்டாதீர்கள் 'நேம்' என்று உச்சரிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது!
I'm learning English. "அய்ம் லே(ர்)னிங் இங்லிஷ் " - என்று சொல்லும் பொழுது ஒரு அழகு புலப்படும்.
What I feel is that today politics is completely looking like a play.- என்பதின் உச்சரிப்பு
"வாட் ஐ ஃபீல் ஈஸ் தட் டுடெய் பொலிட்டிக்ஸ் ஈஸ் லுக்கிங் லைக் அ ப்லெய்" - ஏதோ ஒரு வித்தியாசம் தெரியவில்லை?
டுடெய், ப்ளெய் என்று உச்சரித்தால் ஆங்கிலம் சற்று மிளிர்வதாக தெரியும் அவ்வளவுதான் மற்றபடி ஒன்றும் தவறில்லை.
The state Government has declared that there won't be examinations for 10 and eleven.
'த ஸ்டெய்ட் கவர்ன்மென்ட் ஹஸ் diக்லேர்d தட் தர் வோன்ட் பி இக்ஸாமினெய்ஷ்ன் ஃபார் டென் அன் லெவன்".
எக்ஸாமினேஷன் - என்பதை தவிர்க்கலாம்.
சற்று விளங்கச் சொன்னால்,
ஆங்கில அகராதியில் வார்த்தைகளுக்கு பக்கத்தில் ஒரு slash வைத்து ஏதோ ஒன்றை குறிப்பிட்டிருப்பார்கள் பார்த்திருக்கலாம்.
அது வேறொன்றுமில்லை. அவ்வார்த்தையை உச்சரிப்பதற்கான வழிகாட்டல்.
உதாரணத்திற்கு
HOUSE> / haus/
WATER> / wa:ta(r)/
என்று இருக்கும், கவனித்திருப்பீர்கள்.
இது தான் PHONETICS TRANSCRIPTION என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
44 ஒலி வடிவங்கள் உண்டு. அவற்றில் VOWELS 20, ஏனைய 24 -ம் CONSONANTS ஆகும்.
இந்த PHONETICS TRANSCRIPTION - யை
கட்டாயம் படிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதில் பயிற்சி பெற்றுவிட்டோமானால் ஆங்கில உச்சரிப்பு அழகாக நம் மூளையில் அமர்ந்து விடும்.
உள்ளபடி சொல்லப்போனால், 26 ஆங்கில எழுத்துக்கள் வார்த்தைகளை உருவாக்க பயன்படுகின்றன. 44 ஒலி வடிவ அடையாளங்கள் வாரத்தைகளை உச்சரிக்க வழிகாட்டுகின்றன. இது பற்றி பிறகொரு பாடத்தில் விரிவாக காண்போம்.
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 12
'I burnt the midnight oil to finish this work' - என்று ஒரு வாக்கியம் படித்தேன். இதற்கு அசல் அர்த்தம் என்ன? என ஒருவர் என்னிடம் கேட்டார்.
அவர் அசல் அர்த்தம் என்ன என்று கேட்டத்தில் அர்த்தம் உள்ளது. Literal - ஆக (மேலோட்டமாக) பார்த்தால், இந்த வேலையை முடிப்பதற்கு நான் நடுநிசி எண்ணெயை எரித்தேன் என்று பொருள் வருகிறது.
உள்ளர்த்தம் என்னவென்றால், இவ்வேலையை முடிக்க எனக்கு இரவு வெகு நேரமாகிவிட்டது. விடிய விடிய கண் விழித்து செய்ய வேண்டியதாயிற்று-என்பதே அசல் அர்த்தமாகும். இப்படி, அர்த்தம் மேலோட்டமாக ஒன்றும் உள்ளார்ந்து ஒன்றும் தாங்கி நிற்கும் வாக்கியம் அல்லது சொற்றொடரைத்தான் IDIOM PHRASE என அழைக்கிறார்கள்.
"TO BURN MIDNIGHT OIL" என்கிற IDIOM- யை வைத்து சில வாக்கியங்களை பார்போம்.
I don't know what you are going to do, you have to complete this project at least by burning the midnight oil.
(என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது, இரவு முழுக்க கண் விழித்தாவது இந்த project - யை நீங்கள் முடித்துத் தர வேண்டும் )
That writer is always writing stories only by burning the midnight oil.
அந்த எழுத்தாளர் நள்ளிரவில் தான் கதைகளை எழுதுவார்.
Mr.Raj who is the stage - decorator will finish the entire work by burning the midnight oil and would hand over the stage to you. Don't worry..!
அந்த மேடை அலங்காரக்காரர் விடிய விடிய கண் விழித்து அனைத்து வேலைகளையும் முடித்து stage - யை உங்கள் கைக்கு கொடுத்து விடுவார். கவலைப்படாதீர்கள்.
Likely ministers and administrators use to burn the midnight oil to draft the budgets and some confidential ordinance.
பெரும்பாலும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், இரவு நேரங்களில் தான் பட்,ஜெட் தாக்கல் மற்றும் பல முக்கிய முடிவுகளை மேற்கொள்கிறார்கள்.
AR Rahman has said that most of his tunes were made by him by burning the midnight oil.
தன்னுடைய பெரும்பாலான மெட்டுக்கள் நள்ளிரவிலேயே உருவாக்கப்பட்டவை என்று ஏ.ஆர் ரகுமான் கூறியிருக்கிறார்.
இதே போல் நீங்களும் பல வாக்கியங்களை உருவாக்கலாம். அந்த IDIOM PHRASE - யை எப்படி வைப்பது என்பதே சூட்சுமம் மற்றும் உங்கள் திறமை. இன்னும் பல Idiom -களை பிறகொரு முறை காணலாம்..
---------------------------------------------------------------எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 13
பகுதி 12-யை படித்துவிட்டு இதை (13) படித்தால் தான் புரியும்.
அந்த BURNING THE MIDNIGHT OIL என்ற வார்த்தை எப்படி வந்தத என்பது ஒரு சுவாரசியமான கதை.
1672. மின்விளக்குகள் இல்லாத காலம். ஒரு வித எண்ணெயை பயன்படுத்தி பந்தம் மாதிரி எதையோ எரிய வைத்து தான் வெளிச்சத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள் அப்பொழுதைய மக்கள்.
இரவு பணிகள் அந்த வெளிச்சத்தை பயன்படுத்தி தான் நடைபெற்றன.
இங்கிலாந்தில் ஒரு பண்ணை வேலையில் பகல் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஒருவரிடம் அவரது முதலாளி, 'பாதியில் நிற்கும் வேலையை முடித்துவிட்டுச்செல்" என்றாராம்.
இருட்டில் எப்படி பணி செய்வது? - என்று தொழிலாளி கேட்டிருக்கிறார்.
அதனால் என்ன? Burn the midnight oil and do it - என்று கட்டளையிட்டிருக்கிறார் முதலாளி.
அந்த பணியாளரும் பணியை எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் செய்து முடித்து, தன் டைரியில்
'Today. I burnt the midnight oil to finish the work' என்று எழுதியதாக சொல்லப்படுகிறது.
அது முதல், இரவு கண் விழித்து செய்யப்படும் வேலைகளை இவ்வாறு குறிப்பிட ஆரம்பித்தார்களாம். ஆமாம், மின்சாரம் வந்த பிறகும் கூட.!
Idiom களை மரபுவழிச் சொற்கள் என்று அழைப்பது இதனால் தான் என நினைக்கிறேன்.
---------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 14
"HANDS DOWN" என்றொரு IDIOM உண்டு. அதிக பயன்பாட்டில் இல்லை என்றாலும் Native speakers of English (ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள்) ஏகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
அதிக கஷ்ட்டபடாமல், சிரத்தை எடுக்காமல், மிக எளிதாக - போன்றவையே இந்த Idiom-க்கான அர்த்தம்.
குதிரை ரேஸில் ஒருவர் லகானை பிடிக்காமலேயே குதிரையை வேகமாக ஓட்டி, பந்தயத்தில் வெற்றி பெற்று விட்டாராம். அதாவது கைகளை கீழே தொங்கப் போட்டுக் கொண்டு.
"He got a hands down victory" என்கிற phrase உருவானது இப்படித்தான். 1800-1900 வாக்கில் நடந்தது இது.
சில வாக்கியங்களை நம் சமூக நடப்புகளுக்கு தக்கவாறு உருவாக்குவோம்.
The captain said that it was not a task to win, just we handed down and got this victory.
MGR got a big margin of victory by just being hands down in the hospital.
If you are lucky, you can win in your life by keeping your hands down.
Because of attractive compaigns, DMK pushed down Congress by just keeping their hands down in the 1967 Election!
--------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 15
"There is no much difference between spoken and written English"
இந்தக் கூற்று உண்மைதானா என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.
இது ஒரு முக்கியமான சமாச்சாரம். ஆங்கில மொழியைப் பொறுத்தவரையில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்காது.
என்ன பேசுகிறோமோ அதுதான் எழுதப்படுகிறது. எதை எழுதுகிறோமோ அதுவே பேசப்படுகிறது என்பது உண்மைதான்.
இருப்பினும் conversational English-ல் சற்று இலக்கணம் உதைத்தாலும் தெரியாது. ஆனால் drafting செய்யும்பொழுது இலக்கணம் பிசகினால் அது தவறாகிவிடும்.
மற்றபடி இரண்டிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இதை ஆங்கிலத்தின் சிறப்பு என்றே கூறவேண்டும்.
ஏனெனில் தமிழ் மொழியில் வாக்கியங்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் சம்மந்தமே இல்லாதது போல் தெரியும்.
எங்க இருக்கிற?
எங்கே இருக்கிறாய்?
எதுக்கு இப்படி கேக்கறீங்க?
எதற்காக இப்படி கேட்கிறீர்கள்? போன்ற வித்தியாசங்கள் நம் மொழியில் காணப்படலாம். (கவனிக்கவும். எழுத்திலும் சப்தத்திலும்.)
ஆனால் ஆங்கிலத்தில் இது போன்ற வித்தியாசம் (சப்தத்தில்) வராது. எழுதுவதை தான் பேசுகிறோம்.
பேச்சிலும் எழுத்திலும், Where are you?, 'Why do you ask like this? தான்.
என்ன ஒன்று, பேசும் பொழுது ஒவ்வொரு நாட்டினரிடமும் Slang மாறும் மற்றபடி Structure ஒன்று தான்.
British English-க்கும் American English-க்கும் சில வேறுபாடுகள் உண்டு என்கிற செய்தி அனைவரும் அறிந்ததே!
முதலாவதாக உச்சரிப்பில் நிறைய வேறுபாடுகள் உண்டு.
சொல்லப்போனால் ஒரு Translator தேவைப்படும் அளவுக்கு சில வித்தியாசங்கள் இருக்கும்.
இங்கிலாந்து - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பின் பொழுது ஒரு Mediator இருப்பார் என்று கூறப்படுகிறது.
Egypt- யை அமெரிக்கர்கள் இஜிப்த் என்றும் ஆங்கிலேயர்கள் எகிப்த் என்றும் உச்சரிப்பார்கள்.
Schedule - என்ற வார்த்தை அமெரிக்கர்களால் ஸ்கெஜ்வல் என உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஷெட்யூல் என உச்சரிப்பர். நாமும் ஷெட்யூல் என்று தான் உச்சரிக்கிறோம் என்பது அறிந்ததே!
அமெரிக்கர்களின் Slang 'ழ' வை மையமாக வைத்து stress அதிகம் தராமல் பேசுவார்கள்.
ஆங்கிலேயர்களின் பேச்சு Sylabic - க்கு முக்கியத்துவம் தருவார்கள்.
வேடிக்கை என்னவென்றால், அமெரிக்கர்களின் Slang - யை, நாம் என்ன, ஆங்கிலேயர்களே follow செய்ய சற்று சிரமப்படுவார்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் பேச்சை புரிந்து கொள்ள அத்தனை சிரமம் இருக்காது.
இலக்கணத்திற்கு 100% முக்கியத்துவம் தருவதில்லை அமெரிக்கர்கள். ஆனால் ஆங்கிலேயர்களிடம் பேச்சிலும் எழுத்திலும் இலக்கணத்தில் சுத்தம் இருக்கும். சற்று புரியும்படி சொல்வப் போனால்,
Have you pen? இப்படி பேசினால் தவறொன்றுமில்லை என்கிறார்கள் அமெரிக்கர்கள், Do you have a pen? தான் சரியானது என்று அவர்களுக்கு தெரியும்.
Do you have a pen? தான் சரியானது என்பார்கள் ஆங்கிலேயர்கள்.
Spelling - யை பொறுத்தவரை UK-USக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு.
Colour/Color
Honour/Honor
Labour/Labor
Learnt/Learned
Specialise/Specialize
Visualise/Visualize
Travell/Travel
இன்னும் பல வார்த்தைகள் உண்டு.
Spelling வித்தியாசம் இருந்தாலும் sound-ல் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருக்காது!
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 16
ஆங்கிலத்தில் பேசும்பொழுது ஆங்கிலத்திலேயே சிந்திக்கவேண்டும் என்று கூறுவது, சரியா?
பெரும்பாலோனோர் பரிந்துரைக்கும் யோசனை இது.
நானும் பல முறை பல வகுப்புகளில் இதை பரிந்துரை செயகிறேன்.
"Think in a language in which you speak" என்று ஏறக்குறைய Force செய்திருக்கிறேன்.
ஆனால் இதில் பல உளவியல் விஷயங்கள் இருக்கின்றன.
ஒரு தமிழர் தமிழ் பேசும்பொழுது தமிழில் சிந்திப்பது இயற்கை. ஆங்கிலத்தில் எப்படி சிந்திக்க முடியும் ஆங்கிலம் பேசும் பொழுது?
Technically இது சாத்தியமா என்று பார்ப்போம்....
The slate of one has already been filled in by his MT (Mother Tongue). When he inputs an another language in the slate, the assistance of MT is required. But MT should not influence the second language!
அதாவது தாய் மொழியின் உதவியில்லாமல் ஒரு இரண்டாம் மொழி உட்புக முடியாது. (இங்கு Slate என்று குறிப்பிடுவது மூளையைத் தான்.) ஆனால் இரண்டாம் மொழியை தாய்மொழி influence செய்து விடக் கூடாது. அப்படி நிகழ்வதை தான் MTI (MOTHER TONGUE INFLUENCE) என கூறுகிறோம். தாய் மொழி ஆதிக்கம் என்று தமிழில் சொல்லலாம்.
ஆங்கிலம் பேசும் பொழுது தமிழில் Formate செய்து ஆங்கிலத்திற்கு Translate செய்வதையே MTI என்கிறோம்.
உதாரணத்திற்கு,
யாரிடமிருந்து போன் வந்திருக்கிறது?
என்ற கருத்தை ஆங்கிலத்தில் பேசும் பொழுது, From whom the call has come? என்று நீங்கள் பேசினால் கருத்தை தமிழில் Formate செய்திருக்கிறீர்கள் என்று பொருள்.
Who is calling? என்று பேசினால் அழகாக ஆங்கிலத்தில் Formate செய்திருக்கிறீர்கள்.
Who is that? என்றால் இன்னும் simple.
இது தான் எளிதும் கூட. இது ஒரு சிறிய உதாரணம் தான்.
[DA (Daily Activities) என்றும் TIT to TIE (Thoughts In Tamil to Thoughts In English) என்றும் ஒரு தினசரி பயிற்சி உண்டு. நான் வடிவமைத்ததுதான். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் இதை அறிவர்.]
பொதுவாக பெரும்பாலோனோர் செய்யும் தவறு, தமிழில் வாக்கியம் அமைத்து மொழியாக்கம் செய்து பின்பு ஆங்கிலத்தில் பேசுவதே!
நேரடியாக ஆங்கிலத்தில் அமைப்பது எப்பொழுது சாத்தியம் ஆகும் என்றால், நான் பகுதி ஒன்றில் சொன்னது போல் ஆங்கிலச் சூழ்நிலையை வளர்த்து கொள்வதன் மூலமே அது சாத்தியம் ஆகும்.
ஆங்கிலச் சூழ்நிலை பெற இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் செல்ல வேண்டியதில்லை.
It's of course in your pocket.
ஆமாம் வழிகள் உங்களிடமே உள்ளன.
ஆங்கில தினசரி வாசித்தல்,
நன்கு ஆங்கிலம் பேசுபவர்களிடம் ஆங்கிலத்தில் (சரியோ தவறோ) பேசிக் கொண்டிருத்தல்,
தமிழ் திரைப்படங்களை ஆங்கில subtitle - டன் கண்டுகளித்தல் (ஹை ஜாலி) இப்படி எத்தனையோ வழிகள் உள்ளன.
அல்லது ஒரு teaching போல் இல்லாது உளவியல் ரீதியாக வகுப்பை கொண்டு செல்லும் ஒரு பயிற்றுனரிடம் பயிற்சி பெற முடியும்.
Only you are searching the thing in outside while you have lost such thing inside.
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 17
BOCOTT என்கிற வார்த்தை எப்படி வந்தது என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.
அது ஒரு சுவையான சங்கதி.. 'புறக்கணி' 'ஏற்றுக்கொள்ளாதே' 'ஒத்துக்கொள்ளாதே' -போன்ற வினைச்சொற்களுக்கு BOYCOTT என்றொரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஏதோ ஒரு நபரின் பெயர் போல் உள்ளதே..., இது எப்படி ஒரு வினைச் சொல்லாக வந்தது?
உண்மை தான், இது ஒரு நபரின் பெயர்.
இயர் பெயர் சார்ல்ஸ் C பாய்க்காட். அயர்லாண்ட்காரர் .. பணக்காரர் பெரிய பண்ணைக்கு சொந்தக்காரர். சிறிய பண்னை வீடுகளை வாடகைக்கு விட்டு பணம் ஈட்டி வந்தவரிடம் வாடகையை குறைக்க சொல்லி குடியிருந்தவர்கள் கோரியிருக்கின்றனர்.
Boycott ஆணித்தரமாக மறுத்துவிட்டார்.
பஞ்சாயத்தெல்லாம் வைத்து பேசி பார்த்தார்களாம். அந்த பஞ்சாயத்துக்கே அவர் வரவில்லையாம்.
பேச்சுவார்த்தை நடத்த தினமும் Boycott - க்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
அவருடைய நிராகரிப்பு எப்படி மருவியது என்று பாருங்கள்.
Boycott refused to come.
Boycott denied to talk about rent matter.
Boycott hesitated to attend the council..
Boycott strongly opposed the meeting.
- என்று எழுதி அல்லது பேசிக்கொண்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில்,
He boycotted all of us. - என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலிருந்து மறுத்தல் நிராகரித்தல் எதிர்த்தல் போன்ற வார்த்தைகளுக்கு Boycott என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்தது. வார்த்தை உதயம் 19 ஆம் நூற்றாண்டு .
அந்த வார்த்தையை வைத்து மேலும் சில வாக்கியங்களை பார்ப்போம்.
Do you boycott all of us? (Verb)
He always boycotts to buy China things.(Verb)
I strongly boycott the bullshit clauses in the draft? (Verb)
Reena boycotted the dance competition.(Verb)
Boycotting manner may cause you to miss something. (Present participle adjective)
To boycott is my own decision, Don't insist me to obey yours. (Infinitive Noun)
-----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 18
ஒரு கேள்வி.
உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள/ கற்றுத் தர முடியுமா?
கல்வியில் ஆங்கிலம் ஒரு பாடமாக அமையப் பெற்றதன் காரணமே அம்மொழியை பேச எழுத தெரிந்து கொள்வதற்கு தான்.
ஒரு மாணவரை ஒன்றாம் வகுப்பிலிருந்தே பின் தொடரும் ஆங்கிலம், 17 ஆம் வகுப்பிலும் கூட அவரை முழுமை பெற வைக்க முடியாமல் போவதற்கு அவர் மட்டுமே காரணமில்லை.
கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் தன்மையில் ஏற்பட்ட கோளாரே தலையாய காரணமாகும்.
அடிப்படை அவசியமான பேசும் எழுதும் ஆற்றலை வளர்ப்பதற்கு, நம் கல்வித்திட்டம் பின்பற்றும் முறை, மொழியியல் சார்ந்து அமையவில்லை... இலக்கியத்தை மையமாக வைத்தே பாடத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மாணவர்களும் எப்படியோ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார்கள்.
தாங்கள் படிக்கும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்டால் மாணவர்களிடமிருந்து அருவி போல் பதில்கள் கொட்டுகின்றன.
அதே சமயத்தில், தன்னைப் பற்றி சொல் என்று கேட்டால், எழுதி வைத்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நிலையில் உள்ளது நம் கல்வி முறை.
ஒரு தலைப்பை கொடுத்து ஒரு ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றோமானால், பேச இயலாத மாணவர்கள் நிறையபேர் உள்ளனர்.
காரணம், கல்வி குழுமம் பாடத்திட்ட அமைப்பில் உள்ள சில கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளாக இருக்கலாம்.
ஆங்கிலம் ஒரு பாடமாக அமையப்பெற்றதற்கு காரணம்..அதாவது இலக்கு என்னவென்றால் அம்மொழியை தயக்கமின்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும்தான்.
அந்த இலக்கைச் சார்ந்து போதிக்கும் முறை இருந்தால், நிச்சயம் ஆங்கிலத்தை சரளமாக பேச வைத்துவிட முடியும்.
ஆங்கிலம் ஒரு மொழி, அது கருத்தை பரிமாற பயன்படுத்தப்படும் ஒரு கருவி - என்ற ரீதியில் மனரீதியாக பயிற்சியளித்தால் மட்டுமே ஒரு மாணவனை ஆங்கிலத்தில் பேச எழுத, (தாய்மொழியில் செய்வது போல்) வைக்க முடியும்!
ஒரு பயிற்சியாளர் தானாக pattern களை உருவாக்கி impromptu முறையில் பயிற்சி அளித்தால், நிச்சயம் இது சாத்தியமாகும்.
LISTENING, SPEAKING பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்க வேண்டும்.
ஒரு பயிற்சியாளர் நடைமுறை தலைப்புகளை கையில் எடுத்துக் கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசி, முதலில் மாணவர்களை கவணிக்க வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனின் தன் தினசரி நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் சொல்ல வைக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த தலைப்பைப் பற்றி பேசச் சொல்லலாம்.
அது, 'பிரியாணி, கிரிக்கெட், உங்கள் வீட்டில் யார் யார் உள்ளார்கள் என்ன செய்கிறார்கள்?, உனக்கு பிடித்த சினிமா எது ஏன்? பிடித்த ஹீரோ ஹீரோயின் யார்?- போன்ற தலைப்புகளாக இருந்தால் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச ஆர்வம் பிறக்கும். குறுகிய காலத்தில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இதை நான் என்னிடம் பயற்சிபெறும் மாணவர்களிடம் கண்கூடாக காண்கிறேன்....!
----------------------------------------------------------------
எளிதாக அறிவோம் ஆங்கிலம்.
பகுதி 19
LONG TIME NO SEE... அல்லது LONG TIME, NO SEE என்றொரு Phrase-யை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்...
அதாவது உங்களை பார்த்து வெகு நாளாயிற்று என்ற அர்த்தம் வெளிப்படையாகவே இதில் தெரியும்.
இது பயன்பாட்டில் உண்டா...?
உண்டு என்று சொன்னால் ஆச்சரியப்படாதீர்கள்.
1900-த்தில் யாரோ ஒரு Indo-American ஸ்ரீலங்காவில் பேசப்போக அது Oxford dictionary-வரையில் வந்துவிட்டது.
கேட்பதற்கு உடைந்த ஆங்கிலம் போல் தெரியும் இந்தச் சொற்றொடர் அமரிக்கர்களிடம் ஒரு வழக்கமான பேச்சாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எழுத்திலும் கூட அதாவது கடித விசாரிப்புகளிலும் இதை ஒரு ஸ்டைலாக்கிக்கொண்டுவிட்டார்கள்.
ஆனாலும் ஆங்கில ஆதீனங்கள் (பிரிட்டிஷார்) பெரும்பாலும் இதை பயன்படுத்துவதில்லை. இது Indo pidgin அல்லது Chinese Pidgin வகையைச் சார்ந்தது என்கிறார்கள் இவர்கள்.
பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை பேச்சிலும்கூட ungrammatical வாக்கியங்களை பயன்படுத்தமாட்டார்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவுக்கும் இந்தச் சொற்றொடருக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை! யாரோ ஒரு அமெரிக்கன் பேசித் தொலைத்த சொற்றொடர் இது !
சரி.. ஒருவரை விசாரிக்கும்போது இப்படி விசாரிக்கலாமா?
Dictionary-யில் இருப்பதனால் பயன்படுத்தலாம் என்றாலும், Syntax rule படி தவறு என்கிறார்கள் இங்கிலாந்துக்காரர்கள். "It seems to be long time since I met you" - என்பது தான் சரி என்கிறார்கள்.
தொழிற்சாலைகளில் ஒரு பொருளின் உள்ளளவை அளப்பதற்கு Gauge என்றொரு உபகரணம் உண்டு. அதில் சாதாரண தொழிலாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் "Go, No Go" என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தைகள் அவை. அது போல தான் இதுவும்.
அமெரிக்கர்கள் கலப்பினத்தவர்களாதலால் இலக்கணத்திற்கு மிகப் பெரிய முக்கியக்துவம் தரமாட்டார்கள்.
Wanna, Gonna, Dunno, Yup போன்ற வார்த்தைகளை சகட்டுமேனிக்கு பயன்படுத்துவார்கள். (அவைகளின் அர்த்தங்கள் முறையே Want to, Going to, Don't know, Yes ஆகும்.) இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட நாம் "Long time no see" - யையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
----------------------------------------------------------------
(தொடரும்....)
Author:
MAHENDIRAN V
(அ வை மகேந்திரன்)
Formerly Professor of English
Founder MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR, NAGAPATTINAM, TAMILNADU, INDIA
MOBILE: 91-9842490745, 91-6380406625
Comments
Post a Comment
To call for my visiting class, contact poigaimahi@gmai.com or WhatsApp 9842490745
Thanking you.