Sunday, 4 May 2025

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் - சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன்

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.


எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம்.


க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா?
பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள்.


என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன். இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்புகள் பிண்ணிப்பிணைந்துள்ளது என்று கூறலாம். ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அவ்வளவு எளிதில் கற்றுக் கொள்ள முடியாது என்கின்ற ஒரு நிலை. அதனால் இலக்கணம் அறிவது சற்று கடினமாக தோன்றக்கூடும். அந்தப் பிண்ணலை மட்டும் என்ன என்று நாம் அறிந்து கொண்டோமானால், ஆங்கில இலக்கணம் எத்தனை எளிதானது என்பதை உணர்வீர்கள்.


உலக மொழிகளில் உள்ள முதல் பகுதியான அந்த பார்ட்ஸ் ஆஃப் ஸ்பீச் என்பது இந்த மொழியில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது சிறு பிள்ளைகளுக்கான ஒரு பகுதி என்று அனைவரும் நினைக்கின்றார்கள். ஆனால் ஆங்கில மொழியின் மொத்த இலக்கண கட்டமைப்பின் அஸ்திவாரமே இதில் தான் உள்ளது என்பதை உணர மறுக்கிறார்கள்.


ஒரு வாக்கியத்தை எழுதி அதில் அமைந்துள்ள ஒவ்வொரு வார்த்தையும்  என்ன வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்வதே பார்ட்ஸ் ஆப் ஸ்பீச் என்கின்ற பகுதியின் முதல் பக்கத்தை பிரித்து படிப்பது ஆகும்.


பார்ட்ஸ் ஆப் ஸ்பீச் பத்து வகை தலைப்புகளைக் கொண்டது. நெளன் NOUN, ப்ரநெளன் PRONOUN, வெர்ப் VERB, ஆக்ஸ்ல்யரி AUXILIARY,  அட்ஜக்டிவ் ADJECTIVE, அட்வெர்ப் ADVERB,  ஆர்ட்டிக்ல்ஸ் ARTICLES, ப்ரிபொசிஷன் PREPOSITION, கஞ்சங்ஷன் CONJUNCTION, மற்றும் இன்டர்ஜெக்ஷன் INTERJECTION என்பவைகளே அந்த பத்து வகை.
இந்தப் பத்தையும் ஒவ்வொன்றாக தலைப்பிட்டு ஒவ்வொன்றும் என்ன என்று விளக்கம் தெரிந்து கொள்வதற்கு முன்னால், சில வாக்கியங்களை ஆங்கிலத்தில் அமைத்து அந்த வாக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் இந்த பத்து வகைகளில் எதைச் சார்ந்தது என்று இனம் கண்டுபிடிப்பது ஒரு நல்ல பயிற்சியாகும். அப்படி செய்தால் சற்று ஆர்வமாகவும் இதை தெரிந்து கொள்ள முடியும்.


உதாரணத்திற்கு
I saw a tiger yesterday in the zoo என்கிற வாக்கியத்தில் மொத்தம் எட்டு வார்த்தைகள் உள்ளன.
இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் அது எந்த வகையைச் சார்ந்தது என்பதை இனம் காண முயல்வோம்.
அந்த வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை மேலிருந்து கீழாக எழுதி ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்தாற் போல் அந்த வார்த்தை இந்த பத்தில் எது என்பதை இனம் காண்போம்.
I - PRONOUN
Saw - VERB
A - ARTICLE
Tiger - NOUN
Yesterday - NOUN or ADVERB OF TIME
In - PREPOSITION
The - ARTICLE
Zoo - NOUN

இது ஒரு பரிச்சார்த்தமாக செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு வார்த்தையும் ஏன் அந்த வகையைச் சார்ந்தது என்பதை கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு வகையின் தன்மையை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.


இதுபோல நிறைய வாக்கியங்களை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளுங்கள் அந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் மேலிருந்து கீழாக எழுதிக் கொள்ளுங்கள் அதில் ஒவ்வொரு வார்த்தையும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள். ஒரு இருபது வாக்கியங்கள் அமைத்து அதுபோல முயற்சி செய்தால், பார்ட்ஸ் ஆப் ஸ்பீச் என்றால் என்ன என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

- வை.மகேந்திரன் 
வடக்குப்பொய்கைநல்லூர் - நாகப்பட்டினம்

( சமயம் கிட்டினால் தொடர்வோம்....)

Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE